டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!
ஒருநாள் இரவு விருந்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்ததாக பிரிட்டிஷ் நடிகை கூறியது பேசுபொருளாகியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்கு (66) லெப்பர்ட் கிளப் விருது (Leopard Club Award) வழங்கப்பட்டது. இவர் ஆஸ்கர் விருதும் பெற்றவர்.
இந்த விழாவின்போது அவர் பேசுகையில், ``1998-ல் ஒருநாள் இரவில் விருந்துக்கு அழைப்பு விடுத்து, என்னை டிரம்ப் தொடர்பு கொண்டார். அவரது இடத்தில் நான் தங்குவதை அவர் விரும்புவதாகக் கூறினார்.
ஆனால், அவர் டிரம்ப்தான் என்று நான் நம்பவில்லை. இருப்பினும், நான் அவரை மீண்டும் அழைப்பதாகக் கூறிவிட்டேன். மேலும், அதே நாளில்தான் நான் விவாகரத்து பெற்றிருந்தேன்’’ என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், டிரம்ப்புடன் நான் விருந்துக்குச் சென்றிருந்தால், இன்று உங்களிடம் சொல்வதற்கு ஏதேனும் கதையும் எனக்கு கிடைத்திருக்கும். அமெரிக்காவின் போக்கையும் நான் மாற்றியிருக்கலாம் என்று தெரிவித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.