PMK: ``தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது'' - ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லாமலேயே அன்புமணி தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து இன்று இரவு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில், வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். பெண்கள் மாநாடு என்பதால் அதிக எண்ணிக்கையிலான பெண் பவுன்சர்கள் பாதுகாப்பில் இறக்கப்பட்டிருந்தனர். மாலையில் தொடங்க வேண்டிய இம்மாநாடு கனமழை காரணமாக தாமதமானது. இம்மாநாட்டில் 10.5% இட ஒதுக்கீடு, மதுவிலக்கு, போதைப் பொருள் கஞ்சா ஒழிப்பு உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

என்னுடைய அருமை நண்பர் கலைஞர்
இதில் போதை ஒழிப்பு, வன்னியர்களுக்கான உள்இட ஒதுக்கீடு தொடர்பாக பேசியிருக்கும் ராமதாஸ், "கஞ்சா, சாராயம் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும். இதில் இந்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் ஆட்சிக்கு வந்து செய்யவோம்.
10.5% உள் இட ஒதுக்கீட்டை முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும். என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% உள் இட ஒதுக்கீடு கொடுத்தார். சாதிவாரிக் கணக்கெடுப்பதில் முதவருக்கு என்ன தயக்கம் இருக்கிறது. நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது.

தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது
கங்கை கொண்ட சோழபுரம் பற்றி பேசுகிறார்கள். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன், கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். தந்தை, தனயனான அவர்கள் ஆட்சி எப்படி இருந்தது என்றும் தெரியும். தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது என்பதற்கு அதுவே ஒரு நல்ல உதாரணம்." என்று பேசியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.