கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்' - என்ன நடந்தது?
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை கவின்குமாரின் ஆணவக் கொலை சம்பவம் நிகழ்ந்தும், தமிழக காவல்துறை 'பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என அலட்சியம் காட்டுவதாகக் குமுறுகின்றனர் கிராம மக்கள்.

கல்பட்டி கிராமத்தில் மொத்தமுள்ள 300 குடும்பங்களில், 20-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகக் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பட்டியல் சமூக மக்கள் அனைவரும் ஊருக்குள் செருப்பை கையில் வைத்துக்கொண்டு நடக்க வேண்டும், பைக்கை தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டும், கோயிலில் நுழைய அனுமதி கிடையாது, டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை என எண்ணற்ற சாதியக் கொடுமைகள் சர்வசாதாரணமாக அரங்கேறுவதாகவும், எந்தவொரு அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் கண்டுகொள்வதில்லை எனக் கூறி கண்ணீர் வடிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
"கல்பட்டியில் தீண்டாமைக் கொடுமைகள் ஒன்றும் புதிதல்ல, ஆனால் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் தீனா என்பவரை கொலை செய்யும் முயற்சியில் கொடூரமாகத் தாக்கி, ஆணவக் கொலை மிரட்டல் விடுத்திருப்பது கல்பட்டி பட்டியல் சமூக மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது," என்றனர் அதிர்ச்சியூட்டும் விதமாக.
நம்மிடம் பேசிய கல்பட்டி கிராமத்தினர், "கடந்த 2023-ம் ஆண்டு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் 23 வயது இளைஞர் தீனா. பெண்ணின் சமூகத்தை சேர்ந்த ஊர்மக்கள் மிரட்டியதால், அத்தம்பதி சென்னைக்குக் குடியேறினர்.
இந்நிலையில், 20.07.2025 அன்று கல்பட்டியில் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள, தீனா சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், 'என்னடா, இவன் நம்ம வீட்டுப் பெண்ணைக் கட்டிக்கிட்டு, நம்ம முன்னாடியே கெத்தா சுத்தறான்?' எனத் திருவிழாவிலேயே ஆக்ரோஷமாகக் கூச்சல் போட்டிருக்கின்றனர்.
அந்தக் கோபத்தில், 21.07.2025 அன்று திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற தீனாவின் உறவினர் கருப்பையனைச் சரமாரியாகத் தாக்கி, 'உன் அண்ணன் தீனாவை இங்கே வரச் சொல்லு!' என மிரட்டினர்.
தகவல் அறிந்த தீனா, தீனாவின் தந்தை ராஜலிங்கம், சகோதர் கேசவன் மற்றும் கருப்பையனின் தாயார் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, 20 பேர் கொண்ட கும்பல் தீனாவின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. நெஞ்சிலும் ஆணுறுப்பிலும் தீனாவின் தந்தை ராஜலிங்கத்தையும், சகோதரர் கேசவனையும் கொலைவெறித் தாக்குதல் நடத்தி, தீனாவுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்."
இவற்றை ஆமோதித்து, தீனாவின் நண்பர்கள் சிலர், "தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வி.சி.க-வினரின் உதவியுடன் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது.
ஆனால், "தீனாவும் குடும்பமும் குடிபோதையில் நெடுஞ்சாலையை மறித்ததாகவும், கேட்கச் சென்றவர்களைத் தீனா தாக்கியதால், தற்காப்பாகப் பதிலுக்கு தாக்கினார்கள் எனவும், முன்விரோதம் காரணமாக எங்கள் மீது ஜோடிக்கப்பட்ட வன்கொடுமை வழக்கைப் பதிந்தார் எனவும், தி.மு.க பிரமுகர் கண்ணன் ஊர்மக்களிடம் மனு வாங்கி, ஊர்த் தலைவர் அழகர்சாமி பெயரில் உடனடியாகத் தீனா குடும்பத்தினர் மீது வையம்பட்டி காவல்துறையில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்" என்றனர்.

கண்ணனிடம் பேச முயற்சித்தபோது, "ஏன்கிட்ட எதுக்கு கேட்குறீங்க? எதுவானாலும் இன்ஸ்பெக்டரிடம் பேசிக்கோங்க," என மறுத்துவிட்டார். அழகர்சாமியைத் தொடர்புகொண்டபோது, "இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறில் முடிந்துவிட்டது. பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனத் தீனாவிடம் சொன்னபிறகும், புகார் கொடுத்துவிட்டார். அதேபோல், வையம்பட்டி இன்ஸ்பெக்டரும் 'ஒரு வாரம் உங்களுக்கு நேரம், அதற்குள் பேசி முடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம்' எனச் சொல்லியிருக்கிறார்," என்றார்.
உடனடியாக, காவல் ஆய்வாளர் தனபாலை தொடர்புகொண்டபோது, "இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர், என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்," என்றார் கூலாக. காவல் ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதை அறிந்து, 02.08.2025 அன்று தீனாவைத் தாக்கிய இருவரை மட்டும் கைது செய்திருக்கிறது மாவட்ட காவல்துறை.

நம்மிடம் பேசிய தீனா, "நான் பள்ளிக்குச் செல்லும்போது மானபங்கம் செய்வதில் தொடங்கி, திருமணமான பிறகு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படும் அளவுக்கு, சாதி வன்கொடுமையால் துடிக்கிறோம். சாகும் அளவுக்கு அடிவாங்கிவிட்டு, ஆணவக் கொலை மிரட்டல் வருகிறது எனக் காவல் நிலையம் சென்றால், சாதிய வெறியர்களைக் கைது செய்யாமல், என் மீது எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறது காவல்துறை. என் மனைவியின் வீட்டார் எந்தப் பிரச்னையும் செய்யாதபோதிலும், ஊர்மக்கள் நடத்தும் சாதி வன்கொடுமையிலிருந்து என்னையும், பட்டியல் சமூக மக்களையும் காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கித் தவிக்கிறோம்," என்றார் கண்ணீர் மல்க

கல்பட்டியில் தொடரும் சாதி அடக்குமுறைகள் குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் வே. சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "பட்டியலின மக்களிடமிருந்து மனு கிடைத்தது. உடனடியாக வட்டாட்சியரிடமும், வையம்பட்டி தாசில்தாரிடமும் தக்க நடவடிக்கைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கையின் அடிப்படையில், கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
கவின்குமாரைப் போல, இன்னும் எத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுவதை வேடிக்கை பார்க்கப் போகிறதோ தமிழக காவல்துறை!