செய்திகள் :

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

post image

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளை எட்டியிருக்கிறது. அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

சேகர் பாபு
சேகர் பாபு

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்புமே அதிருப்தியாகி இனி பேசவே வேண்டாம் என பேச்சுவார்த்தையை முறித்திருக்கின்றனர். இன்று காலை நடந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பதை விசாரித்தோம்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் சேகர் பாபு பேசிய சில விஷயங்கள் போராட்டக்குழுவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை இனி அதிகாரிகளுடன் பேசவே விரும்புகிறோம் என போராட்டக்குழு அறிக்கை வெளியிட்டது. நேற்று மதியம் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுடன் போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டக்குழு
போராட்டக்குழு

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அமைச்சர் சேகர் பாபுவிடம் குமரகுருபரன் எடுத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில், நேற்றிரவு 7 மணிக்கு மேல் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் போராட்டக்குழுவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் போராட்டக்குழுவின் கோரிக்கைகள் பற்றி பிரதானமாக பேசப்படவில்லையாம். 'தினசரி 5 லட்சம் பேர் கடந்து போற இடத்துல உட்காந்திருக்கீங்க. அரசாங்கத்துக்கு கெட்டப் பெயர் ஆகுது.

நீங்க இங்க இருந்து முதல்ல கலைஞ்சு போங்க. ராஜரத்தினம் ஸ்டேடியம் கிட்ட இடம் தரோம். அங்க போங்க. நீங்க இருந்து கலைஞ்சா மட்டும்தான். உங்க கோரிக்கைளை என்னால பரிசீலிக்க முடியும். உங்களுக்காக நான் வந்து நிக்குறேன். எனக்கு நம்பிக்கை கொடுக்குற மாதிரி இதை பண்ணி கொடுங்க. மண்டலங்களை தனியாருக்கு கொடுக்குறது அரசோட கொள்கை முடிவு. நீங்க இங்க இருந்து கலைஞ்சு போனா அந்த கொள்கை முடிவுல கூட மாற்றம் பண்ண முடியுமான்னு பார்க்குறேன்.' என சேகர் பாபு கூறியிருக்கிறார்.

தனியாக ஆலோசனை நடத்திய போராட்டக்குழுவினர்
தனியாக ஆலோசனை நடத்திய போராட்டக்குழுவினர்

இதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் தனியாக வெளியே வந்து அரை மணி நேரம் ஆலோசித்துவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். 'உங்களுடைய வார்த்தைகளை மதிக்கிறோம். ஆனால், எங்களால் இங்கிருந்து கலைந்து செல்ல முடியாது. மாநகராட்சி வளாகத்தின் மூன்றாவது கேட்டை திறந்து விடுங்கள். அடையாளத்துக்காக 200 பேர் மட்டும் வெளியே அமர்ந்துவிட்டு, மற்றவர்கள் உள்ளே அமர்ந்துகொள்கிறோம். உங்களுக்கு எந்த அசௌகரியமும் சிக்கலும் வராது.' என போராட்டக்குழுவினர் உறுதியாக கூறியிருக்கின்றனர்.

தான் முன்வைத்த ஆப்சனை ஏற்க மறுத்ததால் சேகர் பாபு கொஞ்சம் அப்செட் ஆகியிருக்கிறார். 'உங்க போராட்டத்துல இருக்க நிறைய பேர் வேலைக்கு போயிட்டாங்க தெரியுமா. இங்க போராடுறதுல பாதி பேரு 5,6 மண்டலங்களை சேர்ந்தவங்களே இல்லை. வெளியே இருந்து வந்தவங்கெல்லாம் இருக்காங்க. நான்தான் சொல்கிறேனே கொள்கை முடிவில் கூட மாற்றம் செய்ய பரிசீலிக்கிறோம் என்று. அதன்பிறகும் என்ன? 12 மணி நேர வேலையை சட்டமாக கொண்டு வர முயன்ற போது விமர்சனங்கள் எழுந்தது. அப்போதே தொழிலாளர்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து நாங்கள் பின்வாங்கினோம். நீங்கள் பிடிவாதமாக இருந்தால் நீதிமன்ற முடிவில்தான் எல்லாம் இருக்கிறது.

சேகர் பாபு
சேகர் பாபு

நீதிமன்ற முடிவும் உங்களுக்கு சாதகமாக வர வாய்ப்பில்லை. யோசித்துக் கொள்ளுங்கள். நல்ல முடிவாக எடுங்கள். கலைந்து செல்லுங்கள். பின்னர் உங்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசுவோம்.' என சேகர் பாபு கண்டிப்பாக கூறியிருக்கிறார்.

போராடும் நபர் வெளியாட்கள் என சேகர் பாபு குறிப்பிட்டது, போராட்டக்குழுவை உஷ்ணப்படுத்தியிருக்கிறது. 'நீங்க எங்களை கொச்சைப்படுத்துறீங்க...' என கோபமடைந்து நேற்றைய பேச்சுவார்த்தையை முடித்திருக்கின்றனர்.

எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் எதுவும் இல்லாமலும் தங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமலும் போராட்டத்தைக் கைவிடுவதிலோ கலைந்து வேறு இடம் செல்வதிலும் போராட்டக்குழுவுக்கு உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது. 'நாங்க எப்போ வாக்குறுதி கொடுத்தோம்...' என பத்திரிகையாளர் சந்திப்பில் சேகர் பாபு பேசியது போராட்டக்குழுவை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது.

ரிப்பன் மாளிகை
ரிப்பன் மாளிகை

இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. 10-15 நிமிடங்கள் வரைக்கு மட்டுமே பேச்சுவார்த்தை சென்றிருக்கிறது. 'என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்..' என சேகர் பாபு ஆரம்பிக்கை, 'எங்களின் மக்கள் கலைந்து வேறு இடத்துக்கு செல்ல விரும்பவில்லை. நாங்கள் சொன்னதைப் போல மாநகராட்சி வளாகத்துக்குள் கேட் அருகே இருக்க அனுமதியுங்கள்.' எனப் போராட்டக்குழு கேட்டிருக்கிறது. 'அதெல்லாம் சரிப்பட்டு வராது..' என சேகர் பாபு முகம் சிவந்திருக்கிறார். 'எங்களின் முடிவில் உறுதியாக இருக்கிறோம்.' என போராட்டக்குழு கூற, 'அப்போ அவ்ளோதான்...' என அப்செட்டாக கிளம்பியிருக்கிறார் சேகர் பாபு. இனி பேச்சுவார்த்தை இல்லை. பேச்சுவார்த்தை முறித்துக் கொள்ளப்படுகிறது என போராட்டக்குழுவும் அறிவித்துவிட்டது.

சேகர் பாபுவுடன் உள்ளே பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருந்த சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் போராட்டக்குழுவை வெளியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். இந்த சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு சொல்லி அனுப்பிய ஒரு முக்கிய மெசேஜையும், அதாவது மாநிலம் முழுக்க இருக்கும் நிலை குறித்து பெ.சண்முகம் போராட்டக்குழுவிடம் கூறியிருக்கிறார். பதிலுக்கு போராட்டக்குழு சண்முகத்திடம் சில சட்ட நுணுக்கங்களை விளக்கிக் கூறி அதை கே.என்.நேருவிடம் சொல்லி செயல்படுத்தச் சொல்லுங்கள் என கூறி அனுப்பியிருக்கிறது.

சேகர் பாபு
சேகர் பாபு

சேகர் பாபு கூறிய 'அப்போ அவ்ளோதான்...' என்கிற வார்த்தையோடு பேச்சுவார்த்தை அப்படியே முறிந்திருக்கிறது. 'எங்களை கைது செய்யுங்கள். நாங்கள் அஞ்சவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறோம்.' என போராட்டக்குழு அமைச்சரிடமே கூறியிருக்கிறது. ஆனால், கூட்டத்தை கலைக்கும் வேலைகளில் காவல்துறையை ஈடுபடுத்த அரசு தயாராக இல்லையாம். அது அரசுக்கு இன்னும் பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்தும் என்கிற தயக்கத்தில் இருக்கிறார்களாம்.

அரசுத்திட்ட விழா; அழைப்பு விடுக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மான... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க