குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டு...
கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!
பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது." என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்.
கமல் ஹாசன் சமூக வலைதள பதிவு:
வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை.
‘அனைவருக்கும் தரமான கல்வி’ எனும் இலக்கோடு செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் அவர்கள் தலைமையிலான குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன்.