ட்ரம்ப் - புதின் சந்திப்பு: உக்ரைன் நிலங்களை விட்டுக்கொடுக்க வேண்டுமா? - எதிர்க்கும் ஜெலன்ஸ்கி!
விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், உக்ரைனின் தலையீடு இல்லாமல் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படாது எனவும், சந்திப்புகள் அனைத்தும் 'செயலில்லாத தீர்வுகளையே (dead solution)' தரும் என்றும் கூறியுள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி.

ட்ரம்ப்பின் முடிவை எதிர்த்த அவர், புதின் உடனான அமெரிக்க அதிபரின் சந்திப்பு "நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரிலிருந்து வெகு தொலைவில் உள்ளது" எனக் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளி அன்று (ஆகஸ்ட் 8) ட்ரம்ப், ஆகஸ்ட் 15ல் ரஷ்ய அதிபரை சந்திக்கவுள்ளதாகப் பேசியிருந்தார். அவருடன், மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் தொடரும் உக்ரைன் போரை நிறுத்துவது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "அதிபர் ட்ரம்ப் அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினைச் சந்திப்பதற்கான தயாரிப்புகள் குறித்து பேசியுள்ளார். அது நமது நிலத்தில் நமது மக்கள் மீது நிகழ்த்தப்படும் போரிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. நாம் இல்லாமல், உக்ரைன் இல்லாமல் இது முடிவடையாது" எனக் கூறியிருக்கிறார்.

போர் நிறுத்தத்தைப் பொருத்தவரையில் ரஷ்யாவுடன் உக்ரைன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு எட்டும் எனக் கூறும் ஜெலன்ஸ்கியும் அவரது நிர்வாகமும், மூன்று-வழி உச்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
ரஷ்யா - அமெரிக்கா சந்திப்பில் முன்னெடுக்கப்படும் தீர்வுகள் உக்ரைனின் நலன்களுக்கு தீங்குவிளைவிக்கலாம் எனக் கருதுகிறது ஜெலன்ஸ்கி தரப்பு. சில செய்தியறிக்கைகள் ரஷ்யா வெற்றி பெற்ற பகுதிகளை உக்ரைன் விட்டுக்கொடுக்கும் வகையிலான தீர்வுகள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
"உக்ரைன் அமைதியை ஏற்படுத்தும் உண்மையான முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எதிரான தீர்வுகள் அனைத்தும் அமைதிக்கும் எதிரான தீர்வுகளே ஆகும். அவற்றால் எந்த பயனும் இராது. நமக்கு உண்மையான, மக்களால் மதிக்கப்படும் அமைதி தேவை" என்றும் பேசியுள்ளார்.
மேலும் உக்ரைனில் நிலப்பரப்பை அரசியலமைப்பை மீறி யாருக்கும் கொடுக்க முடியாது எனத் தெரிவிக்கும் விதமாக, "உக்ரைனின் பிராந்தியம் பற்றிய கேள்விக்கான பதில் எங்கள் அரசியலமைப்பில் உள்ளது. அதிலிருந்து யாரும் எங்களை விலக்க முடியாது. உக்ரேனியர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தங்கள் பிராந்தியங்களை பரிசளிக்க மாட்டார்கள்." எனக் கூறியுள்ளார்.