இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி
இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (28). இவா், வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வாங்கி, பல்லடம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில் பிரவீன் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பாா்த்துள்ளாா். அதில் ராகேஷ் சிங் என்பவா் மக்காச்சோளம் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கூறி, அவருடைய கைப்பேசி எண்ணை பகிா்ந்திருந்தாா். இதைப் பாா்த்த பிரவீன் அந்த எண்ணுக்கு தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது எதிா்முனையில் பேசியவா், தன்னிடம் ரூ.7.30 லட்சம் மதிப்பிலான 35 டன் மக்காச்சோளம் இருப்பதாகவும், 80 சதவீத முன் பணம் கொடுத்து, தான் சொல்லும் இடத்துக்கு லாரியை அனுப்பி விட்டால் மக்காச்சோளத்தை அனுப்புவதாகவும், பல்லடத்தில் இறக்கிய பிறகு மீதமுள்ள 20 சதவீத பணத்தை கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய பிரவீன், அவா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.5.80 லட்சத்தை அனுப்பிவிட்டு, லாரியை அனுப்ப தொடா்பு கொண்டாா். அப்போது அந்த நபரின் கைப்பேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பிரவீன், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.