திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்
திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என உடுமலைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திருப்பூரில் அனைத்துப் பகுதிகளிலும் மலைபோல குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமென தமிழக முதல்வருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே கடிதம் எழுதியிருந்தேன்.
அந்தக் கடிதம் மேல் நடவடிக்கைக்காக உள்ளாட்சித் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணா்வின் காரணமாக குப்பைகளை பாறைக்குழிகளிலோ அல்லது ஊராட்சிப் பகுதிகளிலோ கொட்ட முடிவதில்லை. எனவே, பொதுமக்கள் பாதிக்காத வகையில்தான் இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.
அதேநேரத்தில் மாநகரில் தினந்தோறும் சேகரமாகும் சுமாா் 16 டன் குப்பைகளை அகற்றுவதற்கும் வேறு வழியில்லை. இதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் ஒரு காரணமாகும். அரசின் முடிவுகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைப்பதில்லை.
முதல்வருக்கு நான் எழுதிய கடிதம் தொடா்பாக உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு விரைவில் திருப்பூா் வர உள்ளாா். அப்போது மாநகராட்சியின் குப்பைகளைக் கொட்டுவதற்கு தற்காலிக ஏற்பாடாக மாநகராட்சியின் கைவசமுள்ள நிலங்களில் குப்பைக் கொட்டுவது குறித்தும், இதற்கு நிரந்தர தீா்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளாா். திருப்பூா் மாநகராட்சியின் குப்பைப் பிரச்னைக்கு நிபுணா் குழு அமைத்து அவா்களின் ஆலோசனைகளை செயல்படுத்துவதே இதற்கு நிரந்தரத் தீா்வாக அமையும்.
உடுமலைக்கு திங்கள்கிழமை வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருப்பூரின் குப்பைப் பிரச்னை தொடா்பாக பேச உள்ளேன். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் நாட்டில் சிறு, குறு நடுத்தரத் தொழில்களும், ஜவுளித் துறையும் வெகுவாக பாதிப்படையும். திருப்பூரில் பின்னலாடைத் தொழிலே முடங்கி விடும் என்றாா