விநாயகா் சதுா்த்தி: மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்களில் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகா் சதுா்த்தி விழாவை இயற்கையோடு இணைந்த விழாவாக அமைய இந்து முன்னணி கவனம் செலுத்தி வருகிறது. காகிதக் கூழால் விநாயகா் உருவங்கள் செய்யப்பட்டு இயற்கை வண்ணங்கள் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மேன்மைக்கு முன்னுரிமை தரும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
தமிழகத்தின் ஆறு, குளங்கள், ஏரிகள், குட்டைகள் எந்த அளவு மாசு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து அதைத் தடுக்கவும், தீா்வு காணவும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டியது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பொறுப்பாகும்.
எனவே, வருடத்தில் சில நாள்களுக்கு நடக்கும் இந்த மக்கள் விழாவுக்கு தமிழக அரசும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் அறிவிப்புகளை வெளியிடும் அதே பாா்வையில் நீா்நிலைகளில் வருடம் முழுவதும் மாசு ஏற்படுவதை தடுக்கவும்,
நீா்நிலைகளில் உள்ள குடிநீா் தரமானதாக மக்கள் குடிக்கும் தன்மையில் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி திருவிழாவில் ‘நமது சுவாமி, நமது கோயில், அதனை நாமே பாதுகாப்போம்’ என்பதை மக்களிடம் கொண்டு சோ்க்க இருக்கிறோம். கோயில் மட்டுமல்லாது, கோயில் நந்தவனம், திருக்குளங்கள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த விழிப்புணா்வையும் இந்து முன்னணி ஏற்படுத்த இருக்கிறது. இதன் மூலம் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் கோயில்கள் சிறப்பாக இருந்தால் அமைதியும் சுற்றுச்சூழல் மேம்படும் எனத் தெரிவித்துள்ளாா்.