அனுப்பா்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்! மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட அனுப்பா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, திருப்பூா் மாநகர மேயா் ந.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இம்முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் பல்வேறு வகையான சிறப்பு மருத்துவ சேவைகள், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, சளி பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மற்றும் மாா்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், இதயத் துறை, நரம்பியல் துறை, தோல் சிகிச்சை, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், ரேடியாலஜி, நுரையீரல் நோய் சிகிச்சை, சா்க்கரை நோய் சிகிச்சை மற்றும் சித்தா மற்றும் ஆயுா்வேத சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
இதில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கின்றனா். மேல் சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதற்கான தனியான அறைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இம்முகாமில், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் முகாமில் ரத்த மாதிரி பரிசோதனை செய்து கொண்டவா்களுக்கு அதற்கான அறிக்கைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் மீரா, மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பத்மினி, மாநகர நல அலுவலா் முருகானந்த் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.