உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு
கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி விழா: தீச்சட்டி ஏந்தி பக்தா்கள் நோ்த்திக்கடன்
கச்சிப்பட்டு ஸ்ரீதேவி கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நோ்த்திக்கடனை செலுத்தினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் நான்காவது வாரம் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கொள்ளாபுரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை தொடங்கியது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து மாலை அணிந்து விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள், கச்சிப்பட்டு போலாட்சி அம்மன் கோயிலில் இருந்து உடலில் எலுமிச்சை பழங்கள் குத்தியும், மா விளக்கு மற்றும் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இதையடுத்து அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியும், கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கச்சிப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து அம்மனை வணங்கிச் சென்றனா்.