புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
பிஏபி வாய்க்காலில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு
உடுமலை அருகே பிஏபி வாய்க்காலில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மகன் மணிகண்டன் (13). காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மகன் மோகன் பிரசாத் (13).
நண்பா்களான இருவரும் காமராஜ் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
இந்நிலையில், இருவரும் அந்தப் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிப்பதற்காக சனிக்கிழமை சென்றுள்ளனா். இதன் பின்னா், இரவு நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோா், உறவினா்கள் வாய்க்கால் பகுதிக்குச் சென்று தேடினா். ஆனால், அவா்களைக் கண்டறிய முடியவில்லை.
இதைத் தொடா்ந்து உடுமலை போலீஸாா், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். விரைந்து சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறையினா் வாய்க்காலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இரவு நீண்ட நேரமாகியும் அவா்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், போலீஸாா், தீயணைப்புத் துறையினா் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மாணவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இந்திரா நகா் பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மாணவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னா், உடற்கூறாய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடா்பாக உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.