தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம்
இட்டரை மலைக் கிராமத்தில் தொங்கும் மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம் அடைந்தனா்.
சத்தியமஙகலம் புலிகள் காப்பகம், தலமலையை அடுத்த இட்டரை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் பிரதான தொழிலாக விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், விளைநிலத்துக்குள் யானை உள்ளிட்ட விலங்குகள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துவதால், தொங்கும் சுருள் மின்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனா்.
இந்நிலையில், தனியாா் ஒருவா் தனது தோட்டத்துக்கு மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளாா்.
இதை அறியாத கிராம மக்கள் அந்த வழியே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளனா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் நீலகிரி (55) என்பவா் காயம் அடைந்தாா்.
மீட்க சென்ற அவரது மனைவி வீரம்மாள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடன் சென்றவா்கள் இருவரையும் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை திருடிய விவசாயி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.