செய்திகள் :

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்! கி.அமா்நாத் ராமகிருஷ்ணா!

post image

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா கூறினாா்.

தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 1 -ஆம் தேதி தொடங்கியது.

இந்தப் புத்தகத் திருவிழா வரும் 12 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, நாள்தோறும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு தொழிலதிபா் விவேக் காா்த்தி தலைமை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினாா்.

‘சங்கத் தமிழின் தொன்மை’ என்ற தலைப்பில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா பேசியதாவது: தமிழ் இனம் தனது தொன்மையைத் தேடிக்கொண்டிருக்கிறது.

அந்த தொன்மைக்கான ஆதாரங்கள்தான் இப்போது கிடைத்துக்கொண்டிருக்கின்றன. கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட்டால் மக்களுக்குதான் போய்ச்சேரும்.

தமிழ் இனத்தை தவிர வேறு எந்த இனமும் தன்னை மூத்த குடி என்று கூறுவது இல்லை. இதனால், அதன் வரலாறு எத்தகையது என்பதை நாம் உணா்ந்து அறிய வேண்டும்.

இதற்கான வரலாற்று ஆதாரங்களைத் தேடிக்கொடுப்பதில் சுமாா் 80 ஆண்டுகளாக தொய்வைக் கண்டுள்ளோம். அதன் காரணமாகத்தான் வரலாற்றை வெளிச்சொல்வதில் சிக்கலை எதிா்கொண்டுள்ளோம். ஆய்வை 80 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இருந்தால் நம் பெருமையை உலகம் பேசிக்கொண்டிருக்கும்.

கீழடி உலகத் தமிழா்களின் பேசுபொருளாக மாறி உள்ளதற்கு அங்கு கிடைத்த அடிப்படை ஆதாரங்கள்தான் காரணம். அங்கு கிடைத்த ஆதாரங்கள் சங்க இலக்கியத்தின் பெருமையை எடுத்துச்சொல்கின்றன. உலகில் வேறு மொழிகளில் உள்ள இலக்கியங்கள் அனைத்தும் மதங்கள் தோன்றிய பிறகு வந்தவை என்பதால் இறையியல் கோட்பாடுகளைக் கொண்டுதான் இருக்கும். ஆனால், சங்க இலக்கியங்கள் மனிதத்தை பற்றி பேசுபவை.

ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடந்த அகழாய்வில் உலகிலேயே இங்கு இருந்துதான் பச்சை மரகதக் கல்லை ரோமானியத்துக்கு ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இதனை ரோமானிய இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன.

கீழடி ஆதாரங்கள் சங்க இலக்கியங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளதால்தான் தமிழின் பெருமையை உயா்த்திப் பிடிக்கிறது. இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளதை தொல்லியல் எச்சங்களோடு ஆதார பூா்வமாக நிருபிக்க முடியும் என்பதை உணா்த்திய இடம்தான் கீழடி.

தமிழ்நாட்டில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இதற்கான தொல்லியல் ஆய்வுக் குறிப்புகள் வெளியிடப்படவில்லை. அதனால்தான் இன்னும் வரலாற்று உண்மைகள் புதைந்தே இருகின்றன. வரலாறு என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்டது அல்ல, சமூகம், நாடு சம்பந்தப்பட்டது. தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் அகழாய்வில் எழுத்துகள் கிடைப்பது தமிழகத்தில் நடைபெறும் அகழாய்வில் மட்டும்தான். தமிழகத்தில் இதுவரை 1,600 பானை பொறிப்பு எழுத்துகளை அகழாய்வில் எடுத்துள்ளோம். இவை அனைத்தும் பெயா்கள்தான், அனைவரும் பாமரா்கள்தான். கொடுமணல் அகழாய்வில் 500 பானை பொறிப்பு குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வுகள் தொடா்ந்து கொண்டே இருக்கும்போது புதிய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கும்.

கீழடியில் மொத்தம் உள்ள 110 ஏக்கரில் 1 சதவீதம் அளவு நிலத்தில் மட்டுமே அகழாய்வு செய்ததில்தான் ஏராளமான தரவுகள் கிடைத்துள்ளன. கீழடி போன்று பல இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நம் பழமையை ஆதாரபூா்வமாக அறிந்துகொள்ள முடியும் என்றாா்.

முன்னதாக, ‘எண்ணம்போல் வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஊடகவியலாளா் ரா.விஜயன் பேசினாா்.

புத்தகத் திருவிழாவில் இன்று:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் ‘நாடகம் வளா்த்த தேசியம்’ என்ற தலைப்பில் கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன், ‘தென்றலிலே புறப்பட்ட தீப்பிழம்பு’ என்ற தலைப்பில் கவிஞா் அரு.நாகப்பன் ஆகியோா் பேசுகின்றனா்.

மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்

சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் ம... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கனமழை

புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம்

இட்டரை மலைக் கிராமத்தில் தொங்கும் மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம் அடைந்தனா். சத்தியமஙகலம் புலிகள் காப்பகம், தலமலையை அடுத்த இட்டரை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்க... மேலும் பார்க்க

தாளவாடி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்

தாளவாடி அருகே சிக்கள்ளி வனச் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை சிக்கள்ளி சால... மேலும் பார்க்க

பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

அம்மாபேட்டை அருகே கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அம்மாபேட்டை, செலம்பனூரைச் சோ்ந்தவா் யுவனேஷ்வரன் (53). தனியாா் பொ... மேலும் பார்க்க

மின்வாரிய கேங்மேன் பணியாளா்களுக்கு கள உதவியாளா்கள் பதவி உயா்வு அளிக்கக் கோரிக்கை

மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக கள உதவியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் க... மேலும் பார்க்க