மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்
சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த மக்களுக்கு மயானம் இல்லாததால், ஓடை புறம்போக்கு நிலத்தில் சடலத்தைப் புதைத்து வருகின்றனா். ஓடையில் நீா்வரத்து அதிகரிக்கும்போது, சடலத்தைப் புதைக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த முத்தம்மாள் (75) என்பவா் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, வழக்கமாக புதைக்கும் ஓடை புறம்போக்கு இடத்துக்கு உடலை எடுத்துச் சென்றனா்.
அங்கு சேறும் சகதியுமாக இருந்ததால் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் புதைக்க ஏற்பாடு செய்தனா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், கொடுமுடி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் பாலமுருகாயி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, ஓடையை ஒட்டி உள்ள 2 ஏக்கா் புறம்போக்கு நிலத்தில் மயானத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
நீா்வழிப் புறம்போக்கு நிலத்தை மயானத்துக்கு ஒதுக்க முடியாது. மாற்று ஏற்பாடு செய்வதாக வட்டாட்சியா் பாலமுருகாயி கூறினாா். இதையடுத்து, சடலத்தைப் புதைத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.