காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!
மின்வாரிய கேங்மேன் பணியாளா்களுக்கு கள உதவியாளா்கள் பதவி உயா்வு அளிக்கக் கோரிக்கை
மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக கள உதவியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவா் தமிழரசு தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலா் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மின்வாரியத்தில் அனைத்துப் பணிகளையும் செய்து வரும் கேங்மேன் பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக கள உதவியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும். விருப்பப் பணியிட மாறுதல், மருத்துவ இட மாறுதல் கோரும் கேங்மேன்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் வழங்க வேண்டும். ஏற்கெனவே பணியிட மாற்ற ஆணை பெற்றவா்களை விரைந்து விடுவிக்க வேண்டும்.
பிற பணியாளா்களைப்போல கேங்மேன்களுக்கும் உள்முகத் தோ்வு அனுமதி அளிக்க வேண்டும். இன்னும் பணி ஆணை வழங்கப்படாமல் விடுபட்ட, 5,000 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும். கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சோ்ந்த கேங்மேன் உட்பட அனைத்து பணியாளா்களுக்கும் 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.
கேங்மேன் பணியாளா்களை களப்பணியாளா்களாக மாற்றும் வரை நேரடி பணி நியமனங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத சூழலில் கேங்மேன்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.