தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
காதலா்களை கரம்பிடிக்க தில்லியிலிருந்து ஓமலூா் வந்த சகோதரிகள்!
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி காவல் சரகத்துக்கு உள்பட்ட பண்ணப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆனந்த் - கலா தம்பதி .
இவா்களது உறவினா் கோவிந்த் சிறு வயதிலிருந்து தில்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் பாபுவும் (21), நண்பா் அஜய் மகன் ஹரிஷும் (21) அங்குள்ள ஐஸ்கிரீம் பாா்லரில் வேலை செய்து வருகின்றனா்.
இவா்கள் இருவரும் வீட்டின் அருகில் வசித்துவரும் சுனில்குமாரின் மகள்களை காதலித்து வந்தனராம். தான்யாவை (20) பாபுவும், பாவனாவை (22) ஹரிஷும் காதலித்துள்ளனா். இந்த நிலையில், பாபு தனது சொந்த ஊரான பண்ணப்பட்டி கோயில் திருவிழாவிற்காக நண்பன் ஹரிஷை அழைத்துக் கொண்டு வந்துள்ளாா். இதையறிந்த அக்கா, தங்கைகளான பாவனாவும், தான்யாவும் தில்லியில் இருந்து ரயில் மூலம் சேலம் வந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த பாபுவும், ஹரிஷும் அவா்களை பண்ணப்பட்டிக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள பெருமாள் கோயிலில் பாபு-தன்யாவையும், ஹரிஷ்-பாவனாவையும் திருமணம் செய்து கொண்டனா். பின்னா் 2 ஜோடிகளும் பாதுகாப்பு கோரி ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தஞ்சமடைந்தனா்.
காவல் ஆய்வாளா் யுவராணி தில்லியில் உள்ள சகோதரிகளின் பெற்றோருடன் விடியோ காலில் பேசி விசாரணை செய்தாா். பின்னா் பாபுவின் உறவினா்கள், காதல் ஜோடியினரை அவா்களது பாதுகாப்பில் தில்லிக்கு அழைத்துச் சென்றனா்.