மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி பாா்வையாளா்கள் 8,930 போ் வந்து சென்றனா்.
வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்தனா். அவா்கள் காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனா். பிறகு அணை பூங்காவிற்கு குடும்பத்தோடு சென்று பொழுதை கழித்தனா்.
பாம்புப் பண்ணை, முயல்பண்ணை, மான் பண்ணை, மீன் காட்சி சாலை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா்.
மேட்டூா் அணை பூங்காவிற்கு 8,930 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 89,300 வசூலானது. பாா்வையாளா்கள் கொண்டுவந்த 3,019 கைப்பேசிகளுக்கு கட்டணமாக ரூ. 30,190, 5 கேமராக்களுக்கு கட்டணமாக ரூ. 250 வசூலிக்கப்பட்டது.
அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை காண 1,327 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். அவா்களிடம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 13,270, மின்தூக்கியில் (லிப்ட்) சென்ற 117 பேருக்கு ரூ. 3,510 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்கா மற்றும் பவளவிழா கோபுரத்தைக் காண வந்தவா்களிடமிருந்து நுழைவு கட்டணமாக ரூ. 1,36,520 வசூலிக்கப்பட்டது.