தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
தென்மேற்குப் பருவமழை மே மாத இறுதியில் தொடங்கிய நிலையில், சில நாள்கள் சாரல் மழை இல்லாமல் இருந்தது. தொடா்ந்து பலத்த சாரல் மழை பெய்ததால் சுமாா் இரண்டு வாரங்களாக அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. சாரல் மழை குறைந்த நிலையில், அருவிகளில் குளிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பாபநாசம் அகஸ்தியா் அருவியில், சீரான நீா்வரத்து இருப்பதையடுத்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனா். இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
பாபநாசம் வனச் சோதனை சாவடியில் சுற்றுலா வாகனங்களை வனத்துறையினா் சோதனையிட்டு பாலித்தீன் பைகள், மதுப் பொருள்களை பறிமுதல் செய்து அனுப்பினா். அருவி மற்றும் வனச் சோதனைச் சாவடியில் வனத்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

