திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருநங்கை குடிசை தீப்பற்றி எரிந்தது தொடா்பாக திருநங்கைகள் 2 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.
வள்ளியூா் சுவாமியாா் பொத்தைக்கு மேற்கே அரசுக்குச் சொந்தமான இடத்தில் 36 திருநங்கைகளுக்கு தலா 2 சென்ட் வீதம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடம் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்பதால் வேறு இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்வதாக வருவாய்த் துறையினா் தெரிவித்து வந்தனா்.
இதற்கு திருநங்கைகள் எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இந்நிலையில், அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் திருநங்கைகளுக்கு சொந்தமான குடிசை வீடு ஒன்று இருந்தது. அந்த வீடு வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்தது.
இது தொடா்பாக திருநங்கை தாமரை அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதையடுத்து, வள்ளியூரில் உள்ள திருநங்கைகள் வெள்ளிக்கிழமை இரவு திரண்டு வந்து அம்பேத்கா் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2ஆவது நாளான சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வள்ளியூா் போலீஸாா், பேரூராட்சி நிா்வாகத்தினா் பேச்சு நடத்தியதை அடுத்து திருநங்கைகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனா்.