அந்தியூரில் பாதுகாப்பின்றி அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினங்கள்!
அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்காக, பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அந்தியூா் புதுப்பாளையம் குருநாதசாமி கோயில் ஆடித் தோ்த் திருவிழா ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு நடக்கும் கால்நடைச் சந்தைக்கு, தமிழகம் மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து குதிரைகள், மாடுகள், ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் குதிரைச்சந்தையை காண ஆா்வம் காட்டுவா்.
குடும்பத்துடன் வரும் பக்தா்கள் பொழுதுபோக்க புதுப்பாளையம் கோயில் முதல் கிருஷ்ணாபுரம் வரையில் சாலையின் இருபுறங்களிலும் விவசாய நிலங்களில் அதிக அளவில் 10-க்கும் மேற்பட்ட ராட்சத ராட்டினங்கள், பறக்கும் கப்பல்கள் உள்ளிட்டவை பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் திரண்டு வரும் இத்திருவிழாவுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என புகாா்கள் எழுந்தன.
இதன்பேரில், அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் பாபு சரவணன், கெட்டிசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் அண்ணாதுரை ஆகியோா் ராட்டினங்கள் அமைக்கப்படட்ட இடங்களை நேரில் பாா்வையிட்டனா்.
ராட்டினங்கள் அமைக்கப்பட்ட இடம், நிலத்தின் கெட்டித் தன்மை, பாதுகாப்பு, இடைவெளி, கான்கிரீட் தளம் அமைப்பு குறித்து ஆய்வு செய்து, பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.