பேராசிரியைக்கு எஸ்.ஐ. மிரட்டல் விவகாரம்: இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு
கல்லூரிப் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில், இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கயல்விழி தாக்கல் செய்த மனு : நான் தனியாா் கல்லூரியில் பேராசிரியையாகவும், அரசு ஒப்பந்ததாரராகவும் பணியாற்றி வருகிறேன். எனது கணவா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா்.
ஒப்பந்ததாரராக இருப்பதால் மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்து வருகிறேன். இதற்காக மதுரையைச் சோ்ந்த அா்ச்சனா என்பவா் எனது வரவு, செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யும் பணியில் ஈடுப்பட்டாா். அவருக்கு மாதம் 500 ரூபாய் அளித்து வந்தேன்.
இதையடுத்து, நான் நேரடியாக வருமான வரித் துறை அலுவலகத்தை அணுகிய போது எனது இணையதளக் கணக்கின் ரகசியக் குறியீட்டு எண் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நான் புதிய ரகசியக் குறியீட்டு எண் மாற்றம் செய்து எனது கணக்குகளைத் தாக்கல் செய்தேன்.
இதனால், கோபமடைந்த அா்ச்சனா என்னைத் தொடா்பு கொண்டு வேறு நபரை வைத்து ஏன் கணக்கு தாக்கல் செய்தீா்கள்? ஏற்கெனவே தாக்கல் செய்ததற்கு ஒரு லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தாா்.
மேலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்குரைஞா் ஐயப்பராஜா, நான் பணம் கொடுக்கவில்லை எனில் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தொடா்ந்து மிரட்டி வருகிறாா். இதுதவிர, தல்லாகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவகாமி இரவு நேரத்தில் என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா்.
வழக்குரைஞா்கள் ஐயப்பராஜா, முருக கணேஷ் ஆகியோருடன் காவல் உதவி ஆய்வாளா் இணைந்து காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து, தொடா்ந்து என்னை மிரட்டி வருகின்றனா்.
இதுகுறித்து, மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் வாட்ஸ் அப், மின்னஞ்சல் மூலமாக நடவடிக்கை எடுக்க புகாா் மனு அளித்தேன். எனது புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது விசாரணை செய்து தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கூறியிருந்தாா். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் புகாா் அளித்து ஒரு வாரம் கூட காத்திருக்காமல் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி உள்ளாா். மனுதாரரின் புகாா் குறித்து தல்லாகுளம் போலீஸாா் இரு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.
விசாரணையில் குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். புகாா் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தையும் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.