உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு
பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்
பழங்குடியின மக்களின் மொழி, பண்பாடு, வாழ்வியலை ஆவணப்படுத்தும் வகையில் தொல்குடி மின்னணு களஞ்சியம் என்ற இணையத்தை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை, அரசு அருங்காட்சியகம் (மதுரை, தேனி, திண்டுக்கல்), சென்னை சமூகப் பணி கல்லூரியின் சமூக நீதி, சமத்துவ மையம், எம்விஎம் அரசு மகளிா் கலைக்கல்லூரி சாா்பில் உலக பழங்குடியினா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் எம்விஎம் அரசு கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் கூடுதல் செயலா் இரா.மகேஸ்வரி, பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்து கொண்டாா். தமிழகத்திலுள்ள பழங்குடி மக்களின் மொழி, வாழ்வியல் முறை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை ஆவணப்படுத்துவதற்கான தொல்குடி மின்னணு களஞ்சியம் என்ற இணையத்தை தொடங்கி வைத்து அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
தமிழக அரசு சாா்பில் கடந்தாண்டு தொல்குடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.2 ஆயிரம் கோடியில் பழங்குடியின மக்களின் கலாச்சார, பொருளாதார மேம்பாட்டுக்காகவும், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிகழாண்டு உலக பழங்குடியினா் தினத்தின் கருப்பொருளாக ஜக்கிய நாடுகள் சபை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பது, எதிா்காலத்தை தீா்மானிப்பது என திட்டமிட்டிருக்கிறது.
அதேபோல, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் தொல்குடி திட்டத்தின் கீழ், பழங்குடியினரின் மொழி, பண்பாடு, மரபுகளை பாதுகாக்க தொல்குடி மின்னணு களஞ்சியம்
( ற்ட்ா்ப்ந்ன்க்ண்.ண்ய்) என்ற இணையம் தொடங்கப்படுகிறது. பழங்குடியின மக்களின் மொழி, கலாசாரம், பண்பாடுகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு ஆய்வுப் பெட்டகமாக இந்த இணையம் செயல்படும் என்றாா் அவா்.
கூடுதல் செயலா் இரா.மகேஸ்வரி பேசியதாவது: கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் ஆக.9ஆம் தேதி உலக பழங்குடியினா் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் தொகையில் சுமாா் 10 கோடி போ் (8 சதவீதம்) பழங்குடியினராக உள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை 86 லட்சம் பழங்குடியினா் (1 சதவீதம்) வசிக்கின்றனா்.
தமிழகத்தில் வசிக்கும் 37 பழங்குடியின சமூகத்தினரிடையே 30 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளை பாதுகாக்கவும், பழங்குடியின மக்களின் மருத்துவ ஞானம், பாரம்பரிய அறிவு உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம்.
பளியா், தோடா், இருளா், ஆலு குரும்பா், காணிக்காரா், நரிக்குறவா் ஆகிய பழங்குடியினரின் மொழி, பண்பாடு, வாழ்வியல் முறைகள் முதல் கட்டமாக தொல்குடி மின்னணு களஞ்சிய இணையதளம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா், மாநகராட்சி மேயா் இளமதி, பழங்குடியினா் நல வாரியத் தலைவா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உள்ளூா் பழங்குடியினா் புறக்கணிப்பு
விழாவில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டு பேசியதாவது: பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தமிழக அரசுக்கு பாராட்டுத் தெரிவித்த அவா், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காட்டுநாயக்கன், மலை வேடன் பழங்குடியின சமூகத்தினா், உலக பழங்குடியின தின விழாவுக்கு அழைக்கப்படவில்லை என அதிருப்தியை பதிவு செய்தாா்.
மேலும், புலையன் சமூகத்தினரை, பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டாா்.