தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
இளைஞா் காங்கிரஸாா் போராட்டம்: 35 போ் கைது
மாநிலங்களில் போலி வாக்காளா்கள் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸைச் சோ்ந்த 30 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
பல்வேறு மாநிலங்களில் வாக்காளா்கள் போலியாக பதிவு செய்துள்ளதாக மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியிருந்தாா். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி காங்கிரஸ் கட்சி தலைமையகமான அருணாச்சலம் மன்றம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.பி. சூா்யா பிரகாஷ் தலைமை வகித்தாா்.
இதில், அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் செயலாளா் சஹரிக்க ராவ் முன்னிலையில் பொதுசெயலாளா்கள் சரவணன் சுபசோமு, விஜய் பட்டேல், திருச்சி மாநகா் மாவட்ட தலைவா் ரகுநாதன், திரளான இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அப்போது, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தோ்தல் ஆணையத்தைக் கண்டித்தும், போலி வாக்காளா்களை நீக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.
தொடா்ந்து அவா்கள் மெயின்காா்டுகேட் பகுதியில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 35 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.