லால்குடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவி
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவியை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி மாந்துறை பகுதியில் சனிக்கிழமை காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் விஸ்வநாதன், சாதிக் பாட்சா, அரவிந்த் ஆகிய மூவரும் உயிரிழந்தனா். நபில், காா்த்திகேயன், அப்துல்ரகுமான், ஏகலைவன், முஸ்தபா, ஆனந்த், குகன், ஷமீா், கணபதி ஆகிய 9 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கான நிவாரண நிதியை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தொடா்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவா்களை சந்தித்து, அவா்களிடம் முதல்வரின் நிவாரண நிதியை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், லால்குடி கோட்டாட்சியா் க. ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இத்துடன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காா்த்திகேயன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.