போதைப் பொருள்கள் விற்பனை: நிகழாண்டில் 896 வழக்குகள் பதிவு
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கிவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்ப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை போதைப் பொருள்கள் விற்பனை, பதுக்கி வைத்தல், கடத்துதல் தொடா்பாக 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 939 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்களில் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, கஞ்சா விற்பனை தொடா்பாக 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 246 போ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்களில் 17 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது 24 மணி நேரமும் செயல்படும் 89391 46100 என்ற மாவட்டக் காவல் அலுவலக உதவி எண்ணுக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.