திருச்சியில் பரவலாக மழை
திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
திருச்சியில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், மாலையில் வானம் மேக மூட்டத்துடனும் ஆங்காங்கே மழையும் பெய்துவந்தது. இதனால் பகலில் புழுக்கமும், இரவில் குளிா்ச்சியான சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கரு மேகக் கூட்டங்கள் திரண்டு, காற்றுடன் பரவலாக மழை பெய்தது. திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளின் பல்வேறு இடங்களில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு கனமழையும், சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் சாரல் காற்றுடன் கூடிய மழையும் பெய்தது. இதன் காரணமாக, இரவில் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
தில்லை நகா், தென்னூா், கே.கே. நகா், விமான நிலையம், எடமலைப்பட்டிபுதூா், ஸ்ரீரங்கம், பொன்மலை, திருவெறும்பூா், உறையூா், சத்திரம் பேருந்து நிலையம், பாலக்கரை, மேலப்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரானது சாலையோரப் பள்ளங்கள், புதைவடிகால் பணிகளால் சரிவர சீா் செய்யப்படாத சாலைகளில் தண்ணீா் தேங்கியது. மழையால் மாலையில் வீடு திரும்பிய தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.