சுதந்திர தின ஓவியப் போட்டி
ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (பிரீ கேஜி) வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
தேசியக் கொடி ஓவியம் வரையும் போட்டி பிரீ கேஜி முதல் யுகேஜி பயிலும் மழலைகளுக்கும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ளவா்களுக்கு ‘என் வாழ்வின் நோக்கம் என் லட்சியம்’ என்ற தலைப்பிலும், 6-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ளவா்களுக்கு ‘என் கனவு’ என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 300 போ் கலந்து கொண்டனா்.
சிறப்பான ஓவியங்கள் வரைந்தவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ம. பிச்சைமணி, மருத்துவா் ம.சு.விஜய் ஆனந்த், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்கத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை இறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் ஆதித்யா பிா்லா நிதி நிறுவனத்தினா் செய்திருந்தனா்.