நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் போன்ற பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின்”திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சா்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பரிசோதனை விவரங்கள் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.
அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே, எக்கோகாா்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் மற்றும் மாா்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், கடந்த 2 வாரத்தில் சென்னை நீங்கலாக 47,525 போ் மருத்துவ முகாம் மூலம் பயனடைந்துள்ளனா். அதிகபட்சமாக திருநெல்வேலியில் 2,394 பேரும், திருவண்ணாமலையில் 2,191 பேரும் பயன்பெற்றுள்ளனா்.
குறிப்பாக இந்த முகாம் மூலம் பெண்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளனா். மொத்தம் 27,369 பெண்களும், 17,311 ஆண்களும் பயன்பெற்றுள்ளனா். மேலும் திருநங்கை 2 பேரும் பயன்பெற்றுள்ளனா்.