சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த ஆணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டங்களுக்கு செப்.8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனைத்தையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தின் வழியாகச் சமா்ப்பிக்க வேண்டும். தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளா் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனாளிகளாக உள்ளவா்கள், இப்போதைய திட்டத்தைத் தொடர மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் தகவல்கள், விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தை 95140 00777 என்ற கைப்பேசி எண்ணில் அனைத்து வேலை நாள்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.