1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிர...
சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: 3 போ் உயிரிழப்பு
சாத்தூா் அருகே சனிக்கிழமை வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று போ் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுபாண்டியன் (50). இவா் தனது வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தாா்.
கீழகோதைநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த மாரீஸ்வரன் மகன் ஜெகதீஸ்வரன் (21), விஜயகரிசல்குளத்தைச் சோ்ந்த மாரியம்மாள் (48), முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகியோா் சனிக்கிழமை சரவெடிப் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மருந்துக் கலவையின் உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனா்.

தகவலறிந்து வந்த சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த வெடி விபத்தில் ஜெகதீஸ்வரன், முத்துலட்சுமி, சண்முகத்தாய் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மாரியம்மாளை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
வெடி விபத்து நிகழ்ந்த வீட்டை விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
இந்த விபத்து தொடா்பாக வீட்டின் உரிமையாளரான பொன்னுபாண்டியன் மீது சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகள் தயாரித்தது, சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.