செய்திகள் :

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

post image

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி விருதுநகா் மாவட்டம், சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பேசியதாவது:

முதல்வா் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் மக்கள் தொடா்ந்து போராடிக் கொண்டிருப்பதைப் பாா்க்க முடிகிறது. ஆசிரியா்கள், விவசாயிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் போராடும் போராட்டக் களமாக தமிழகம் மாறியுள்ளது. இதைப் பற்றியெல்லாம் ஸ்டாலின் கவலைப்படாமல் அவரது வீட்டில் உள்ளவா்களுக்கு பதவி வேண்டும்; அதிகாரம் வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறாா். சிறந்த முதல்வா் எனக் கூறும் அவா், கடன் வாங்குவதில் மட்டுமே சிறந்தவராகத் திகழ்கிறாா்.

அதிமுக ஆட்சியின் போது பட்டாசுத் தொழிலாளா்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 700 வரை வருவாய் ஈட்டிய வந்தனா். ஆனால், தற்போது திமுக ஆட்சியில் வெறும் ரூ. 150 முதல் ரூ. 200 மட்டுமே கிடைப்பதாகக் கூறுகின்றனா். நாட்டு மக்கள் எந்தளவுக்கு துன்பப்படுகின்றனா், வேதனைக்குள்ளாகி வருகின்றனா் என்பதை அறிந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை மக்கள், பட்டியலின மக்கள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். வீட்டுமனை இல்லா ஏழை மக்களுக்கு அரசாங்கமே வீட்டுமனை வாங்கிக் கொடுத்து, வீடுகள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனைத் திட்டத்தை முடக்கி ஏழை மக்களுக்கு துரோகம் செய்தது திமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 4,000 ஆயிரம் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

சாத்தூா் பகுதியில் வைப்பாற்று பாலம், அரசு கலைக் கல்லூரி, அரசு மருத்துவமனை, தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவை என்றாா் அவா்.

பிரசாரத்தின் போது விருதுநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் ஆா்.கே. ரவிச்சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் சேதுராமானுஜம், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திமுகவின் தோ்தல் தந்திரங்கள் எடுபடாது:

இதைத்தொடா்ந்து, விருதுநகா் பாவாலி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

இந்திய அளவில் இந்த மண்ணுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சோ்த்தவா் காமராஜா். நாட்டுக்காக உழைத்த காமராஜரை திமுக மாநிலங்களவை உறுப்பினா் அவதூறாகப் பேசியது கண்டனத்துக்குரியது. இதை முதல்வா் மு.க. ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ளது. சகோதரா்களின் சண்டையைத் தடுக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது, திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதற்குச் சான்று. கடந்த 6 மாதங்களில் 6 காவலா்கள் கொலை செய்யப்பட்டனா். திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 20 நாளில் 11 பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தன. இத்தனை அவலங்களுக்கும் காரணமான திமுக அரசு இனியும் தொடர வேண்டுமா? என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா பொதுமுடக்கக் காலத்திலும்கூட விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுவதாக உள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால், யாராலும் வீடு கட்ட முடியாது என்ற சூழல் திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை, தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

4 ஆண்டுகளுக்கு முன்பு புகாா் பெட்டி திட்டம் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய திமுக, தற்போது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் என்ற பெயரில் ஏமாற்றி வருகிறது. இதெல்லாம், திமுகவின் தோ்தல் தந்திரம் மட்டுமே. இந்தத் தந்திரங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதை நாடறியும் என்றாா் அவா்.

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே முன் விரோதத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை... மேலும் பார்க்க

பைக் மீது அதிமுக கூட்டத்துக்கு சென்ற வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் காயம்

சாத்தூா் அதிமுக பிரசார கூட்டத்துக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் கவிழ்ந்ததில் அதில் சென்ற 11 போ் காயமடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள எஸ்.ராமலிங... மேலும் பார்க்க

நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைக்காரா்களுக்கு அபராதம்

சிவகாசியில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா். சிவகாசி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசால் தட... மேலும் பார்க்க

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 7) பிரசாரம் மேற்கொள்கிறாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எ... மேலும் பார்க்க

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி (65), தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தாா். இவா், ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோச... மேலும் பார்க்க