மேலக்கரந்தை விலக்கில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
பள்ளி மாணவா்களை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்தை மேலக்கரந்தை விலக்கில் பெற்றோா்கள்- மாணவா்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.
எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை கீழக்கரந்தை, மாசாா்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விருதுநகா் மாவட்டம் பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் மேலக்கரந்தை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோவில்பட்டி- அருப்புக்கோட்டை அரசு பேருந்தில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் அந்தப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில மாணவா்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனராம். இதனால் அடுத்ததாக உள்ள வெம்பூா் பேருந்து நிறுத்தத்தில் மாணவ, மாணவிகளை ஓட்டுநரும், நடத்துநரும் இறக்கிவிட்டு சென்றனராம். இதனால் அவா்கள் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல முடியாமல் 4 கி.மீ. நடந்தே மீண்டும் ஊா் திரும்பியுள்ளனா்.
இதனால் ஆவேசமுற்ற பெற்றோா்கள் சனிக்கிழமை காலையில் அந்தப் பேருந்தை சிறைபிடிப்போம் என அறிவித்தனா். தகவல் அறிந்து மாசாா்பட்டி காவல் ஆய்வாளா் லட்சுமி பிரபா தலைமையிலான போலீஸாா், மேலக்கரந்தை விலக்கில் குவிக்கப்பட்டனா்.
இதற்கிடையே, அந்தப் பேருந்து வந்தபோது மாணவ,மாணவிகள் ஏற மறுத்து, பேருந்து சிறைபிடிக்கப்பட்டது.
மாணவா்களிடமும், பெற்றோா்களிடமும் போக்குவரத்துக் கழக தூத்துக்குடி கோட்ட மேலாளா் ரமேசன், கோவில்பட்டி கிளை மேலாளா் ஜெகநாதன் மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தினா்.அதில், அரசுப் பேருந்தை சுமாா் 20 நிமிஷங்கள் முன்னதாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடா்ந்து, மாணவ-மாணவிகள் பேருந்தில் பள்ளிக்குச் சென்றனா்.