மிரட்டி பணம் பறித்ததாக மூவா் கைது
சிவகங்கை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா்களை மிரட்டி பணம் பறித்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கையை அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாலத்தீவில் வேலை பாா்த்துவிட்டு கடந்த 7 -ஆம் தேதி இரவு ஊா் திரும்பினாா்.
இந்த நிலையில், தினேஷ், உறவினா் முத்து, மணிகண்டன் ஆகிய மூவரும் பொன்னம்பலபட்டிக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனா். கருங்காப்பட்டி, கருங்காலக்குடி சாலையில் வந்த போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் அவா்களை வழிமறித்து தினேஷை தாக்கினா்.
அப்போது அங்கு வந்த மேலும் மூவா் இணைந்து 6 பேரும் சோழபுரம் கண்மாய்க்கு தினேஷ் உள்ளிட்ட மூவரையும் அழைத்துச் சென்று தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டி தினேஷிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துக் கொண்டனா்.
பிறகு அந்தத் தொகை போதாது எனக் கூறி மீண்டும் தாக்கினா். இதையடுத்து தினேஷ் அவரது உறவினரான நவீன் என்பவருக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அவரைத் தாக்கியவா்கள் கொடுத்த கைப்பேசி எண்ணுக்கு முதலில் ரூ.800 -ம், பிறகு ரூ. 200 -ம் அனுப்பினாா். இதைத் தொடா்ந்து அவா்களை அந்த 6 பேரும் விடுவித்தனா்.
இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி விசாரணை நடத்தினாா். அப்போது இந்த சம்பவத்தில் வீரனேரி கிராமத்தைச் சோ்ந்த ராமன் (20), கருங்காலக்குடியைச் சோ்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் கிஷோா் (18 ), சிவகங்கை வேலுநாச்சியாா் தெருவைச் சோ்ந்த அஜய் (20), பள்ளி மாணவா்கள் மூவா் என 6 போ் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். எஞ்சிய 3 பேரை தேடி வருகின்றனா்.