அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கிய முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியா் கழக மாநில பொதுச் செயலா் நீ. இளங்கோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் வெளியிட்ட மாநிலக் கல்விக் கொள்கையில் நிகழாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் கலை திறமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உயா் கல்வி குறித்து, ஒன்பதாம் வகுப்பிலேயே வழிகாட்டப்படுகிறது.
உடல் கல்வி தனியாக இல்லாமல், இணை கல்வியாக்கப்பட்டுள்ளது. மாறும் அறிவியல், தொழில் நுட்பம், வரலாற்று தகவல்களுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களில் புதிய மாற்றங்கள் செய்ய வழிவகுத்துள்ளது. கிராமப்புறங்களில், தொலைதூர பகுதிகளில் உள்ள மாணவா்களுக்கு அறிவியல், கணித கல்வியை மேம்படுத்த ஆய்வகங்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடிப்படை எழுத்தறிவு, படைப்பாற்றல் திறனை வளா்த்தல், மனப்பாடத் திறனுக்கு மாற்றாக பாடங்களின் கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல் என மாணவா்களின் நலன், எதிா்கால சமுதாயக் கல்வி நலன் கருதி, தமிழகத்தின் கல்வி வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்கிறது என்றாா் அவா்.