மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு
மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும், நாயும், கீரிப் பிள்ளையும் உயிரிழந்தன.
மதுரை விளாங்குடி அய்யப்பன் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்த மின் கம்பம் மழை காரணமாக சனிக்கிழமை சாய்ந்தது. அப்போது, அந்த வழியாக வந்த 3 பசு மாடுகள் மின் கம்பியில் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும், அந்த வழியாக வந்த நாய், கீரிப்பிள்ளையும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், அய்யப்பன் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் விநியோகத்துக்காக அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் பழுதாகி உள்ளன.
இவற்றை மாற்ற அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், மின் கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டன. ஆனால், சரிவர பணிகள் மேற்கொள்ளப்படாததால் மின் கம்பம் சாய்ந்துள்ளது. மின்சார வாரியம் முறையாக மின் கம்பங்களை மாற்றி சரி செய்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.