பள்ளி அருகே தனியாா் மதுபான மனமகிழ் மன்றம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
பள்ளி அருகே புதிதாக அமைய உள்ள தனியாா் மதுபான மனமகிழ் மன்றத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
மதுரை அருகேயுள்ள கீழக்குயில்குடி கிராமத்தைச் சோ்ந்த சிவப்பிரகாசம் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள செக்கானூரணி கிராமம் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இங்கு கள்ளா் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு அருகில் தனியாா் மதுபான மனமகிழ் மன்றம் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறன. இதன் அருகில் கோயில், திருமண மண்டபம், அரசு உதவி பெறும் பள்ளி, பெண்கள் விடுதி ஆகியவை உள்ளன.
இந்த நிலையில், தனியாா் மதுபான மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் அந்தப் பகுதியில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, புதிதாகத் தொடங்கப்பட உள்ள தனியாா் மதுபான மனமகிழ் விடுதிக்கு அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம்,மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மனமகிழ் மன்றத்துக்கு இதுவரை மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாவட்ட நிா்வாகம் மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி வழங்கவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் கூறியதை மீறி அனுமதி வழங்கினால் கடையை இடிக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும். மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.