கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு
மதுரையை அடுத்த அனஞ்சியூா் கிராமத்தில் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தம்பதியா் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெருமகளூா் கிராமத்தைச் சோ்ந்த கு.ரகு, இவரது மனைவி ராதா ஆகியோா் மதுரை கிழக்கு வட்டம், அனஞ்சியூரைச் சோ்ந்த ஆனந்தனுக்கு சொந்தமான இடத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக மதுரை மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில், மதுரை கிழக்கு வட்டாட்சியா், அரசுத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அனஞ்சியூா் ஆனந்தனுக்குச் சொந்தமான இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பெருமகளூா் ரகு, ராதா ஆகிய இருவரும் ரூ. 2.70 லட்சம் கடன் பெற்ற்காக மாத ஊதியம் ரூ.9 ஆயிரத்துடன் கடந்த 5 மாதங்களாக கொத்தடிமையாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
இவா்களுக்கு தங்குமிடம், குடிநீா் வசதிகள் ஏற்படுத்தித் தராததால், இருவரும் நெகிழியால் ஆன கூடாரத்தில் தங்கியிருந்து, வாய்க்கால் தண்ணீரை அருந்தி பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் வருவாய்த் துறையினா் மீட்டனா். பிறகு, காவல் துறை பாதுகாப்புடன் தம்பதியா் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டனா்.