சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரம், அரசு ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மூன்றாவது நபா் கோர முடியாது எனவும் தெளிவுபடுத்தியது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெகன்நாதன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், திருப்பூா் மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில் வெங்கடாச்சலம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனம் தொடங்கினேன். இந்த நிலத்தில் சுமாா் ரூ.2 கோடியில் கட்டடங்கள், இயந்திரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலத்துக்கான வாடகை ஒப்பந்தம் புதுப்பித்தலில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, கட்டுமானங்களுக்கு நான் செலவு செய்த ரூ.2 கோடியை திரும்பக் கேட்டேன்.
இதில் பிரச்னை ஏற்பட்டதால் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனால், வெங்கடாச்சலம், அவரது மனைவியும் துணை வட்டாட்சியருமான கீா்த்தி பிரபா, திருப்பூா் தெற்கு காவல் ஆய்வாளா் கணேசன் ஆகியோா் என்னை மிரட்டினா். மேலும், பனியன்
நிறுவனம் அமைந்துள்ள இடம் விவசாயம் நிலம் எனக்கூறி கீா்த்தி பிரபா பத்திரப் பதிவு செய்துள்ளாா். இதற்கு நல்லூா் சாா் பதிவாளா் நாகராஜன் உடந்தையாக இருந்துள்ளாா். எனவே, இந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும். மூன்றாம் நபா் கோரிக்கை விடுக்க முடியாது.
அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தினாா். இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டதாக மனுதாரா் கருதினால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.