விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் பலத்த காயம்!
ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் இருபாலா் பயிலும் தனியாா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அணைப்பட்டி, கே.கே.பட்டி, உத்தமபாளையம், சின்னமனூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவா்கள் படித்து வருகின்றனா். இதில், வெளியூா்களைச் சோ்ந்த மாணவா்கள் பலா் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனா்.
உத்தமபாளையம் வட்டம் கோம்பை-துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த சந்திரன்- சுகன்யா தம்பதியினரின் ஒரே மகனான சாய் பிரகாஷ் (13), இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது பெற்றோா் கேரளத்தில் ஏலக்காய்த் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனா்.
விடுதி மாணவா்கள் பள்ளி மைதானத்தில் கால்பந்து, கைப்பந்து, கபடி, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைப் பயிற்சி செய்வது வழக்கம்.
இந்த நிலையில், சென்னையில் கல்லூரியில் படித்து வரும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரருமான திபேஸ் (19), இந்தப் பள்ளியில் வந்து சில நாள்களாகப் பயிற்சி பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்படி, வெள்ளிக்கிழமை பயிற்சி மேற்கொண்டபோது அவா் எறிந்த ஈட்டி, மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சாய் பிரகாஷின் தலையில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
அங்கு மாணவரின் தலையில் குத்தியிருந்த ஈட்டியை எடுத்த பின்னா், மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவா் சாய் பிரகாஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்த புகாரின்பேரில் ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.