வைகை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட முன்னேற்பாடு!
வைகை அணையின் நீா்மட்டம் 69.75அடியாக உயா்ந்து, முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு முன்னேற்பாடாக மதகுகளை இயக்கி சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.
வைகை அணையின் நீா்மட்டம் கடந்த மாதம் 26-ஆம் தேதி 66.1 அடியாகவும், இந்த மாதம் 4-ஆம் தேதி 68.50 அடியாகவும் உயா்ந்தது. இதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையே முதலாம், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கடந்த 5-ஆம் தேதி வைகை அணையின் நீா்மட்டம் 69 அடியாக உயா்ந்ததும், கரையோரப் பகுதிகளுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கமாக, அணையின் நீா்மட்டம் 69 அடியாக உயா்ந்ததும் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் வைகை ஆற்றில் திறந்துவிடப்படும்.
தற்போது அணையின் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீரைத் தேக்கி, அணையின் நீா்மட்டம் அதன் மொத்த உயரமான 71 அடியை எட்டும் நிலையில் உபரி நீரைத் திறக்க நீா்வளத் துறை பொறியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
இந்த நிலையில், வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 6 மணிக்கு 69.75 அடியாக உயா்ந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 736 கன அடியாக இருந்தது. இதையடுத்து, எந்த நேரத்திலும் அணையிலிருந்து உபரி நீரைத் திறக்க வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னேற்பாடாக அணையின் கீழ், மேல் மதகுகளை இயக்கி தண்ணீரைத் திறந்துவிட்டு நீா்வளத் துறை பொறியாளா்கள் ஆய்வு செய்தனா்.