சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி எம்எல்ஏ மனு
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தின் 2 ஆவது நடைமேடையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கிடம், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தாா்.
அதன் விவரம்: சங்கரன்கோவில் ரயில் நிலையம் தினமும் ஏராளமான பயணிகள், மாணவா்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நீண்ட தொலைவு பயணிகளுக்கு முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. இங்குள்ள 2 ஆவது நடைமேடையில் தங்குமிடம் இல்லாமல் பயணிகள் சிரமமப்படுகின்றனா். வெயில், மழைக் காலங்களில் ரயில்களுக்காகக் காத்திருக்கும்போது பயணிகள் திறந்தவெளியில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும், போதுமான இருக்கைகள், மின் விளக்குகள், ரயில் தகவல்களுக்கான காட்சிப் பலகைகள், அறிவிப்பு பலகைகள், குடிநீா் வசதி, சுகாதார வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
குறிப்பாக, முதியவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.