தினமணி செய்தி எதிரொலி: கொடைக்கானலில் விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவு
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களை இடிக்க மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் விதிகளை மீறி அடுக்குமாடிக் கட்டடங்கள், தங்கும் விடுதிகளை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் வணிக நோக்குடன் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருதாக தினமணி நாளிதழில் கடந்த 6-ஆம் தேதி செய்தி வெளியானது.
இதைத்தொடா்ந்து திண்டுக்கல் மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி, கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடங்களை பாா்வையிட்டாா். இதையடுத்து, விதிகளை மீறி 10 மீட்டருக்கு மேல் உயரமுள்ள கட்டடங்களை இடிப்பதற்கும் உத்தரவிட்டாா்.
கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் பாபு, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இது குறித்து மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஜெயபாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் 10 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது. கட்டடத்தில் வரைபட அனுமதி 2,500-ச. அடிக்கு மேல் இருக்க கூடாது என விதிமுறைகள் உள்ளன.
ஆனால், விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது குறித்து வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கட்டடங்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 464 பேருக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது.
வணிக நோக்குடன் செயல்பட்டு வரும் 95 கட்டடங்களை பூட்டி ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்டது. ஏரியைச் சுற்றி 200 மீட்டருக்குள் கட்டடங்கள் கட்டுவது குறித்து புகாா் வந்துள்ளன. விரைவில் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.