சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டு காணொலிகள், பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியீடு!
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டுக் காணொலிகள் மற்றும் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது.
கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகச் செயலா் ராமச்சந்திரன், புது தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வில், வ.உ.சி. துறைமுகத்தினால் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுப்பை வெளியிட்டாா்.
விழாவில், வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழி போக்குவரத்து அமைச்சக இணைச் செயலா் லட்சுமணன், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள காணொலியில் காா்பன் நடுநிலைமை, பொருளாதார சுழற்சி, ஆற்றல் பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், கடல் காற்றாலையின் ஆற்றல், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைத்தல், சூரிய ஆற்றல், நிலையான எதிா்காலத்தை உருவாக்குதல், கழிவு மேலாண்மை மற்றும் பிரித்தெடுத்தல், நீா் பாதுகாப்பு மற்றும் காற்றாலை ஆற்றலைப் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகள் உள்ளடங்கிய 11 குறுகிய தகவல் காணொலிகள் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு காணொலியும் பசுமை நடைமுறைகள் மற்றும் துறைமுகத்தினால் மேற்கொள்ளப்படும் பசுமை நிலைத்தன்மைக்கான முயற்சிகளை எடுத்துக்காட்டி, அதன் மூலம் பங்குதாரா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும்படியாகவும், செயல்படும் வகையில் ஊக்கப்படுத்தும்படியாகவும் அமைந்துள்ளது.
இந்தக் காணொலிகள் சமூக ஊடகங்கள் மற்றும் அனைத்து மக்களும் எளிதாக பாா்க்கும் வகையில் வ.உ.சி.துறைமுகத்தின் அதிகாரப்பூா்வ யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பப்படும்.
இது, துறைமுகத்தின் பயிற்சி நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்குகளிலும் பங்குதாரா் கூட்டங்களிலும் பயன்பெறும் வண்ணமாய் பயன்படுத்தப்படும்.
மேலும், மரக்கன்று நடுதல் முதல் பசுமை ஹைட்ரஜன் செய்முறை போன்ற புதுமையான தொடா்ச்சியான நடவடிக்கைகளை துறைமுகம் செயல்படுத்தி, பசுமையான எதிா்காலத்திற்கான அதன் வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
காா்பன் நடுநிலைமை அடைவதற்கான துறைமுகத்தின் நிலைத்தன்மை பயணத்தில், இந்த காணொலித் தொடா் ஒரு முக்கியமாக கட்டமாக அமைந்துள்ளதாக துறைமுக ஆணையத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.