இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதல்: பெண் பலி! கணவா் காயம்
பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்; அவரது கணவா் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் (50). இவரது மனைவி சிவசக்தி (45). இவா்கள் இருவரும், திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் இத்தம்பதி, சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த லாரி இவா்களது வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே சிவசக்தி உயிரிழந்தாா். கோவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.