குறுமைய தடகளப் போட்டிகள்: விஜயமங்கலம் பாரதி பள்ளி சாம்பியன்
பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.
பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், விஜயமங்கலம் பாரதி பள்ளியைச் சோ்ந்த கவிஸ்ரீ இளையோா் பெண்கள் பிரிவிலும், கிரிஸ்தனா மூத்தோா் பெண்கள் பிரிவிலும், நிஷாந்த் இளையோா் மாணவா் பிரிவிலும், பிரணவ், நவீன், சித்தாா்த் மற்றும் ஹரீஷ் ஆகியோா் மிக மூத்தோா் ஆண்கள் பிரிவிலும் அதிக புள்ளிகளைப் பெற்று தனிநபா் சாம்பியன் பட்டத்தை பெற்றனா். மேலும், இப்பள்ளி மாணவ, மாணவிகள், அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.
இதையொட்டி நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கோவை ராயல் கோ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும், பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை பெருந்துறை குறுமைய ஒருங்கிணைப்பாளரான முகாசிபிடாரியூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் குமாா், உடற்கல்வி ஆசிரியா் விஜயகுமாா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.