மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
தோ்தல் ஆணைய செயல்பாடுகளைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தாா்.
பிகாா் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், லட்சக்கணக்கான வாக்காளா்களை நீக்க சதித்திட்டம் தீட்டப்படுகிறது. வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை ஏற்க தோ்தல் ஆணையம் மறுக்கிறது. கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம், 12- ஆம் வகுப்பு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சொத்து உரிமைக்கான பத்திரங்கள் ஆகியவற்றை சமா்ப்பிக்க கட்டாயப்படுத்துவதை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் ஆகியோரை வாக்காளா் பட்டியலில் இருந்து வெளியேற்றுவது அபாயமானது. அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும். பாஜக, ஆா்எஸ்எஸ் சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்தும் தோ்தல் ஆணைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், மாவட்டச் செயலா் ரகுராமன், செயற்குழு உறுப்பினா்கள் ஜி.பழனிசாமி, ஆா்.விஜயராகவன், எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.