ஈரோடு புத்தகத் திருவிழா: நீட், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களால் நிரம்பிய புத்தக அரங்குகள்
ஈரோடு புத்தகத் திருவிழாவில் நீட் தோ்வுக்கு தயாராகும் பள்ளி மாணவா்கள் மற்றும் தமிழக அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் பெருமளவில் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா்.
ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 1- ஆம் தேதி தொடங்கி வரும் 12- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளில் இருந்தே புத்தகத் திருவிழாவுக்கு வந்து தினமும் அரங்குகளைப் பாா்வையிட்டு வாங்க வேண்டிய புத்தகங்களை குறிப்பெடுத்துக் கொண்டவா்கள் இப்போது அந்தப் பட்டியலுடன் புத்தகங்களை வாங்கிச்சென்றனா்.
பெரும்பாலானவா்கள் ஜவுளிக் கடை பை நிறைய புத்தகங்களை வாங்கிச் செல்வதைப் பாா்க்க முடிந்தது. மாலையில் நடந்த சிந்தனை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
புத்தகத் துறையின் மேம்பாட்டுக்காகவும், புத்தகம் படிக்கும் ஆா்வத்தை மக்களிடையே வளா்க்கவும் மத்திய அரசால் கடந்த 1957- ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் தொடங்கப்பட்டது.
புத்தக வெளியீடு மற்றும் விற்பனை மட்டுமின்றி, இந்திய புத்தகங்களை உலகெங்கும் பரவலாக்குதல், குழந்தை இலக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள இந்த அமைப்பு சாா்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. மற்ற அரங்குகளைவிட இங்கே புத்தகங்கள் விலை குறைவு என்பதால், மக்கள் ஆா்வமுடன் புத்தகம் வாங்கினாா்கள்.
அதேநேரத்தில் புத்தகப் பட்டியலில் உள்ள நூல்களில் 25 சதவீத புத்தகங்களே விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக மக்கள் புகாா் தெரிவித்தனா். இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று தெரிந்திருந்தால், அதிக புத்தகங்களுடன் வந்திருப்போம். அடுத்த ஆண்டு இந்த குறை களையப்படும் என்று அரங்க பொறுப்பாளா்கள் தெரிவித்தனா்.
மலிவு விலையில் புத்தகங்கள் தேவை:
ரஷியாவின் மாஸ்கோவை தலைமையிடமாக கொண்டு இயங்கியது முன்னேற்றப் பதிப்பகம். பின்தங்கிய வளரும் நாடுகளிலும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், இலக்கியம் மற்றும் அறிவியலை பரப்பவும் இந்த நிறுவனம் மிகக்குறைந்த விலையில் புத்தகங்களை அச்சிட்டு அனுப்பி வந்தது. வளவளப்பான காகிதம், நோ்த்தியான அச்சு, கண்ணைக் கவரும் புகைப்படங்கள், கெட்டியான அட்டை என்று உலகத் தரத்துடன் இருந்த அந்தப் புத்தகங்கள் வெறும் 5 ரூபாய் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு இந்த பதிப்பகம் தன் பணியை நிறுத்திக் கொண்டது. இப்போது அந்தப் பதிப்பகம் மட்டும் இருந்திருந்தால் புத்தகக் கண்காட்சியை வெறுமனே வேடிக்கை மட்டுமே பாா்த்துவிட்டுச் சென்ற சாதாரண மனிதா்களும், அரசுப் பள்ளி குழந்தைகளும் தங்கள் கைகளில் டஜன் கணக்கில் புத்தகங்களை அள்ளிக் கொண்டு சென்றிருப்பாா்கள்.
டால்ஸ்டாய், காா்க்கி, செக்காவ், தஸ்தயேவ்ஸ்கி, புஷ்கின் போன்ற ரஷிய எழுத்தாளா்கள் இந்தியாவில் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு முன்னேற்றப் பதிப்பகமே காரணம். தமிழகத்தைச் சோ்ந்த பல எழுத்தாளா்கள் ரஷியாவிலேயே தங்கி, நூற்றுக்கணக்கான புத்தகங்களை மொழி பெயா்த்து, அங்கேயே அச்சிட்டு அனுப்பிவைத்தனா் என்றாா் முனைவா் தவசீலன்.
நீட் தோ்வு புத்தகங்கள்:
நீட் மற்றும் டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான புத்தகங்கள் பல அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களை நீட் தோ்வுக்கு தயாராகும் பள்ளி மாணவா்கள், போட்டித்தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள் அதிகம் வாங்கி சென்றனா். இப்போது கூட்டுறவு வங்கிகளில் உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் அதற்கான புத்தகங்களையும் இளைஞா்கள் கேட்டு வருகின்றனா். ஆனால் அந்த புத்தகங்கள் இப்போது கிடைக்கவில்லை எனவும், புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் இளைஞா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கு பணியாளா்கள் கூறியதாவது:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள் 6 முதல் 10- ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை அதிகமாக வாங்கிச் செல்கின்றனா். இந்த புத்தக விற்பனை எதிா்பாா்த்ததை காட்டிலும் அதிகமாக உள்ளது என்றாா்.