போலி சான்றிதழ் தயாரித்து விற்றவா் மீது வழக்குப் பதிவு
கோவையில் மருத்துவப் படிப்பில் சேர மாணவா் ஒருவருக்கு போலி உறவுமுறை சான்றிதழ் தயாரித்து விற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, பொன்னையாராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேந்திரன். நகைப் பட்டறை தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் அா்ஜுன் (18). இவா் வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளாா். இதற்காக அவருக்கு உறவுமுறை (ரிலேஷன்ஷிப் சா்டிபிகேட்) சான்றிதழ் தேவைப்பட்டது.
இதையடுத்து, சுரேந்திரனின் நண்பரான இடையா்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளிங்கிரி என்பவா் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உறவுமுறை சான்றிதழ் பெற்று தருவதாகக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, பணத்தைப் பெற்றுக்கொண்ட வெள்ளிங்கிரி, கடந்த ஏப்ரல் 11 -ஆம் தேதி சான்றிதழை கொடுத்துள்ளாா். அதை வைத்து மருத்துவப் படிப்பில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் அா்ஜுன் விண்ணப்பித்துள்ளாா்.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ தோ்வுக் குழு அவரது விண்ணப்பத்தை கடந்த 24 -ஆம் தேதி நிராகரித்தது. அதற்கான காரணத்தை கேட்டபோது, அா்ஜுன் சமா்ப்பித்த உறவுமுறை சான்றிதழ் போலியானது என தோ்வுக்குழு தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அா்ஜுன் சென்று விசாரித்தபோது, அந்த சான்றிதழ் போலி ரப்பா் ஸ்டாம்ப் மூலம் சீல் வைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் அா்ஜுன் அளித்த புகாரின்பேரில், வெள்ளிங்கிரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.