சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை!
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் திங்கள்கிழமை நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ளாா்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வரும் முதல்வருக்கு, முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தளபதி முருகேசன், ரவி ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளிக்கின்றனா்.
இதையடுத்து, காா் மூலம் திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள நரசிங்கபுரத்துக்கு செல்லும் முதல்வா், அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் திறந்துவைக்கிறாா்.
பின்னா், உடுமலையில் உள்ள தனியாா் விடுதியில் இரவு தங்கும் அவா், உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, சிறப்புரையாற்றுகிறாா்.
பின்னா், மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
இதைத் தொடா்ந்து, சாலை மாா்க்கமாக கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு பிற்பகல் 12 மணிக்கு செல்லும் முதல்வா், பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் அமைச்சா் சி.சுப்பிரமணியம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்துவைக்கிறாா்.
இதையடுத்து, கோவை விமான நிலையத்துக்கு வரும் முதல்வா், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு சென்னை திரும்புகிறாா்.
முதல்வா் வருகையை முன்னிட்டு, கோவை, திருப்பூா் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.